×

நிலப்பத்திரம் மோசடி வழக்கில் 3 பேர் கைது

 

கோவை, நவ.1: கோவை கணபதி பகுதியை சேர்ந்த செந்தில்நாதன். இவருக்கு அன்னூரில் 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2020-ம் வருடம் செந்தில்நாதனின் நண்பர் வெங்கடேசன் இவரிடம் பணம் கேட்க, பணம் இல்லாத காரணத்தினால் செந்தில்நாதன் தனது நில பத்திரத்தை கொடுத்து அடமானம் வைத்து பணத்தை எடுத்துக் கொள்ள கூறியுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் பத்திரத்தை வாங்கி கலைச்செல்வன் என்பவரிடம் அடமானம் வைக்க, பின்னர் அந்த பத்திரம் வெங்கடேசனுக்கு தெரியாமல் பல நபர்களிடம் கைமாறியது.

இறுதியாக சென்னையை சேர்ந்த ஜோதி மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் பாலசுப்பிரமணியன் என்ற நபரை செந்தில்நாதன் என போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து நந்தகுமார் என்பவரை உடந்தையாக வைத்து ஜெயச்சந்திரன் என்பவருக்கு ரத்தினசாமி என்பவர் மூலம் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து செந்தில்நாதன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் (49), தூத்துக்குடியை சேர்ந்த வெங்கடேசன் (41) மற்றும் திருப்பூரை சேர்ந்த ரத்தினசாமி (61) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுகு உட்படுத்தினர். மேலும், ரூ.1.50 கோடி மதிப்புள்ள நில பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலப்பத்திரம் மோசடி வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Senthilnathan ,Ganapati ,Annur ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை